Bharatha Natyam

Tamil / English / Norsk

'கை வழி கண் செல்லல் வேண்டும்
கண் வழி மனம் செல்லல் வேண்டும்
மனம் செல்லும் வழி பாவம் தோன்றும்
பாவம் தோன்றும் இடத்தில் ரஸம் பிறக்கும்'
இதுவே பரதநாட்டியத்தின் அடிப்படையாகும்.

இந்தியாவில் தமிழ்நாட்டில் பிறந்து; வளர்ந்த ஒர் அரும பெரும் ஆடற்கலைப் பொக்கிசமே பரதநாட்டியம். ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்து பதினொன்றாவது நூற்றாண்டு வரை சதிர் எனவும் சின்னமேளம் எனவும் தாழ்த்தப்பட்டோரால் (தேவதாசிகளினால்) கோயில்களிலும் அரசவைகளிலும் ஆடப்பட்டு வந்த இந்த நடனம் கடந்த பல ஆண்டுகளாக பரதநாட்டியம் என்று புதுப்பெயர் பூண்டு, புதுபொழிவுடனும், சிலரால் புனிதமாவும், சிலரால் மக்களிடம் எடுத்துச்சொல்லும் ஊடகமாகவும் போற்றப்பட்டு வருகின்றது.

இந்தியா கதக், கதகளி, ஒரிசி, மணிப்புரி, பரதம்நாட்டியம், குச்சுப்புடி என்ற பெரும் சாஸ்த்திரியக் கலைகள் தந்த ஒரு நாடாகும். இதில் தென்இந்தியாவில் குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர் போன்ற இடங்களில் மலர்ந்து பரவியதே பரதநாட்டியம். எம் ஈழத்தமிழர்களும் பெரும்பான்மையினர் இப்பெரும் கலைகளில் பரதநாட்டியத்தையே விரும்பிக் கற்றும், வளர்த்தும் வருகின்றனர். ஈழத்தமிழர்கள் நமது தேசத்தில் மட்டுமல்லாது புலம்பெயர்ந்த நாடுகளிலும் இக்கலையை வளர்த்து வருவதில் பெரும் பங்கினை வகித்து வருகின்றனர்.

நினைப்பது மனோபாவம். நினைத்தவுடன் அசைத்தல் அபிநயம்.அபிநயத்தினால் தோன்றும் முகக்குறி சுவை. ஒலியின் பேதம் பண். கால்கலின் பேதம் தாளம். இவை ஐந்தும் ஒன்று சேர்வதனால் ஒரு நாட்டியக்கலை முழு பரிமாணம் பெருகிறது. இவ்விலைமதிப்பற்ற இக்கலைக்கு வரலாறுகள் பல உண்டு. புராண வரலாறு, உலகியல் வரலாறு, முற்கால வரலாறு இடைகால வரலாறு, தற்கால வரலாறு என பலவாறாகப் பிரிக்கலாம். இத்துடன் எதிர்கால வரலாறும் எம்மிடையே பல கேள்விகளுடன் காத்திருக்கிறது.

கோயில்களிலே ஆடுதற்கும், பாடுதற்கும் என்று இவற்றிலே மிகத் தேர்ச்சி பெற்ற நடன மாதர் அமர்த்தப்பட்டனர். இத்தகைய ஒழுங்குமுறை தமிழ்நாட்டில் பல்லவர, சோழ, பாண்டிய ஆட்சிக்காலத்தில் நிலவி வந்தது. அவர்கள் அக்கால சமுகத்திலே நன்மதிப்புப் பெற்றவர்களாகத் திகழ்ந்தனர். நெடுங்காலமாக இந்துசமய நிழலிலே கலைகள் மிகவும் நேர்த்தியான முறையில் வளர்ச்சி அடைநது வந்துள்ளன. இந்துக் கோவில்கள் கவின்கலை மையமாகவும் விளங்கிவந்தன. போவில் அமைப்புகளிலும் சிற்பங்களிலும், ஓவியங்களிலும் இசையும் நடனமும் முக்கிய இடத்தை பிடித்திருந்தன.

சாத்திரிய நடனத்திலும், இசையிலும் மிகுந்த ஆவர்கொண்ட முதலாவது இராசஇராசசோழன் பல கோவில்களைக் கட்டுவித்தான். ஆயனற்சிற்பியை வைத்து தஞ்சைபெரிய கோவிலை மிகச் சிறப்புடன் செல்வச் சிறப்பு, சமயச்சிறப்பு, கலைவளம் என்பனவற்றை ஒருமித்து பிரதிபலிக்கும் கோவிலாகக் கட்டினான்.நபட்டிய மரபுகள் சிலவற்றை அழியாது தொகுக்கும் கலைப்பணி ஒன்றினைத் தொடக்கி வைத்த பெருமை இராசஇராசசோழனையே சாரும்.இக்கோவில்களைப் போலவே வேறு பல கோவில்களும் அரசகுலத்தவர்களால் கட்டப்பட்டன.

அரசகுலத்தை சார்ந்த மாதர்களும் இந்நடன பயின்று நடனமணிகளாக விளங்கிளர்.நாம் இன்றும் பாவிக்கின்ற பரதநாட்டியத்திற்குரிய உருப்படிகளின் பல சாகித்தியங்களை தஞ்சை நால்வர் புனைந்தனர். சின்னையா, பொன்னையா, சிவானந்தம் வடிவேலு என்று அழைக்கப்படும் சகோதரர்கள் கி.பி. 1800 நூற்றாண்டுப் பகுதியில் நாட்டியத்திற்கான உருப்படிகளை ஒரு நாட்டியக் கச்சேரிக்கேற்ற வகையில் ஒழுங்கு படுத்தினர். அவ்வொழுங்கு முறைகளே இன்றும் நாம் நாட்டியக் கச்சேரிகளிலும் பரதநாட்டிய அரங்கேற்றங்களிலும் கடைபிடித்து வருகின்றோம்.